நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்நுட்ப வசதிகளுடன் தமிழ்ப்பள்ளியில் நூலகம்

மஞ்சோங்: 

சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியின் கருவளமைமைய கலை வினையரங்கம் 68 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

இதில் தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட நவீன வசதிகள் உள்ளடக்கிய  நூல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவர்கள் அமர்ந்து வாசிக்கும் முகப்பிடம் மற்றும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள தொலைக்காட்சி ஸ்டுடியோவும் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்நிகழ்வினை தொடக்கி வைத்த போது மஞ்சோங் மாவட்ட துணை கல்வி அதிகாரி பரிமளா வடிவேலு கூறினார்.

இவ்வட்டாரத்தில் இத்தகைய நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் முதல் தமிழ்ப்பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது. இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு தங்களை அடுத்த கட்ட நகர்விற்கு தயார் செய்துக்கொள்ள பேருதவியாக அமையும் என்று அவர் கோடிக்காட்டினார்.

இனிவரும் காலங்களில் இந்நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இயங்க முற்பட வேண்டும். இத்தனை வசதிகள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பலாம். இவ்வாண்டில் முதலாம் ஆண்டில் சீனப்பள்ளியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. நமது பள்ளியை நாம்தான் காக்க வேண்டும் மேம்படுத்த வேண்டும் என்று வலுயுறுத்தினார் பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் முன்னாள் ஆசிரியர் சண்முகம்.

இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிதியுதவி திரட்டி இத்திட்டத்திற்கு வற்றாத ஆதரவை வழங்கியுள்ளதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேஸ்வரன் மனோகரன் கூறினார். இந்நாட்டிலுள்ள இதர தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இப்பள்ளியின் கருவளமைய வினையரங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் நிறைவு பெற்றது. இதன் செலவு 68 ஆயிரம் ரிங்கிட்டாகும். இதில் ஓய் .தி. ஓய் சென்.பெர்ஹாட் நிறுவனம் 25 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கி உதவியதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் கி. மாரியம்மாள் கூறினார். மீதமுள்ள நிதியுதவியை வணிகர்கள், நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் வாயிலாக 43 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி கிடைக்கப்பெற்றது. அவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக அவர் நன்றியை கூறிக்கொண்டார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில், அதிகமாக வாசிக்கும் பண்பினை கொண்ட மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அத்துடன், இந்த நூல்நிலையத்தை நவீன முறையில் சிந்தித்து உருவாக்கிய ஆசிரியை சுலோசனா சுப்பிரமணியம் சிறப்பிக்கப்பட்டார்.

- ஆர்பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset