நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் ஏழு தொண்டூழியர்கள் மரணம்: மலேசியா கண்டனம்

புத்ராஜெயா:

காசாவில் செயல்படும் வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஏழு தொண்டூழியர்களைப் பலி கொண்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

முற்றுகையிடப்பட்ட காசா மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்  தங்கள் குடிமக்களை இழந்து துக்கத்திலிருக்கும் நாடுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவாக டபள்யூ.சி.கே. வின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன .

அந்த அமைப்பின் செயல்பாடுகளை இடை நிறுத்தம் செய்வது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு இடையூறாக அமையும். பஞ்சம் மற்றும் நோயால்  ஏற்கனவே போராடிக்கொண்டிருப்பவர்களின் நிலையை இது மேலும் மோசமடைய செய்யும்.

இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் மூன்று பிரிட்டிஷ் பிரஜைகள், ஒரு போலந்து நாட்டவர், ஒரு ஆஸ்திரேலியர், ஒரு பாலஸ்தீனர் மற்றும் இரட்டை அமெரிக்கா-கனடிய குடியுரிமை பெற்ற ஒருவரும் அடங்குவர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகக் கட்டடத்தின் மீது சமீபத்தில்  நடத்தப்பட்ட தாக்குதல்கள்  ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தின் 2728வது தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு காசாவில் மோதலை முடிவுக்கு வர வேண்டும் என்றும்  விஸ்மா புத்ரா வலியுறுத்தியது.

பாலஸ்தீன மக்கள் அனைத்துலக சமூகத்தின் உறுதியான ஆதரவுக்கும்  உதவிக்கும் தகுதியானவர்கள்.  

காசாவில் நிலவும் நெருக்கடிக்கு அமைதியான மற்றும் நிலையான தீர்வுக்கு கூட்டாக பாடுபடுவது அனைவரின் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset