நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோதமாக 5.6 மில்லியன் ரிங்கிட்டை பெற்ற குற்றச்சாட்டை 3 சகோதரர்கள் மறுத்துள்ளனர்

ஈப்போ: 

சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் மொத்தம் 5.6 மில்லியன் ரிங்கில் முதலீட்டு பணத்தை பெற்றுக்கொண்ட மூன்று  சகோதரர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அய்னுல் ஷாரின் முஹம்மத் முன்னிலையில் இக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளை எம். விஜேந்திரன், டேனியல் மனோகரன் அப்துல்லா, எம். தேவேந்திரன் ஆகியோர் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

கடந்த 2016 நவம்பர் மற்றும் 2020 டிசம்பர் மாதத்திற்கு இடையில், கிரிப்டோகரன்சியை கையாளும் ஒரு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான மூன்று பேரும் தனித்தனியான சந்தர்ப்பங்களில், பல தனிநபர்களிடமிருந்து மொத்தம் 5.6 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு பணத்தை பெற்றதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 100,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் முஹம்மது ஹைகல் அஷ்ரஃப் சுஹைமி கோரினார்.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வழக்கறிஞர் சி.வி. கிருஷ்ணதேவன் குறைந்த தொகையை விதிக்கும்படி கேட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் பிப்ரவரி 19 அன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான நீதித்துறை மறுஆய்வுக்காக மனு தாக்கல் செய்துள்ளனர்.

குற்றச்சாட்டுகள் முறையற்றது என்றும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிர்வாகம் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்கள். 

அவர்களில் ஒருவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டவர். ஒருவருக்கு நிலையான வருமானம் இல்லை, அதே நேரத்தில் ஒருவரின் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஒவ்வொருக்கும் 20,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கினார். 

மேலும் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 18ஆம் தேதி தொடரும் என அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset