நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பேரா தம்பூனில் கெ அடிலான் துணைத்தலைவர் ரஃபிசி ரம்லி போட்டி? - அரசியல் பார்வை

ஈப்போ:

பேராக்கில் கெ அடிலான் கட்சியின் துணைத்தலைவர் ராஃபிசி ரம்லி போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது.

அப்படி அவர் போட்டியிடுவாரேயானால் அது தம்பூன் நாடாளுமன்ற தொகுதியாக இருக்கக்கூடும் என பேரா அரசியல் வட்டாரம் பேசி வருகிறது.

முன்னதாக தம்பூன் நாடாளுமன்றத்தில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டதோடு, பேரா ஜசெகவும் அன்வார் பேராக்கில் போட்டியிட வேண்டும் என்ற அழைப்பை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தம்பூன் தொகுதியை பொறுத்தவரை தேசிய முன்னணி தொகுதியின் அம்னோ தலைவர் டத்தோ அமினுடினை வேட்பாளராக நிறுத்துவதற்கு நடப்பு முடிவில் இருந்தாலும் தம்பூன் வாக்காளர்கள் மத்தியில் அமினுடினை வேட்பாளராக ஏற்கும் மனநிலையில் இல்லை. 

அமினுடினை பொறுத்தவரை தம்பூன் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினராக சுமார் 3 தவணைகள் இருந்தார். 

2018 தேர்தலில் அவர் கெ அடிலான் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். அந்த தோல்விக்கு பிறகு தம்பூனில் இருந்த  அவரது சேவை மையத்தை மூடியதோடு கூட்டணி கட்சிகளோடு தம்பூன் தொகுதி தேசிய முன்னணி தலைவர் என்ற அடிப்படையில் நெருக்கமான உறவையும் கொண்டிருக்கவில்லை என்ற பரவலான குறைகூறல்களும் தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்களின் குரலாக ஒலிக்கிறது. மக்களோடும் அவர் களமாடவில்லை.

இந்த நிலையில் தேசிய முன்னணி தம்பூன் நாடாளுமன்றத்தில் நட்சத்திர வேட்பாளரை நிறுத்தாவிடில் தம்பூன் நாடாளுமன்றம் தேசிய முன்னணி கையை விட்டுப் போகலாம் என்று கட்சியினர் கருதுகின்றனர்.

ராஃபிஸியை பொறுத்தவரை அவர் ஒரு நட்சத்திர வேட்பாளர். 

அவர் இங்கு போட்டியிடுவாரேயானால் தேசிய முன்னணி வேட்பாளருக்கு கடுமையான போட்டியை தரலாம். வெற்றியும் பெறலாம்.

தம்பூன் நாடாளுமன்றத்தை பொறுத்தவரை இரு கட்சிகளுமே நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்தினால் மட்டுமே போட்டி சூடாக இருக்கும் என்பது சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் கவன ஈர்ப்பாக அமையும்.

இதனிடையே எதிர்வரும் 9-10-2022/ஞாயிற்றுக்கிழமை தம்பூனில் டிராக் (பிரச்சார லோரி) மூலம் பிரச்சாரத்தை ராஃபிசி தொடங்குகிறார். அவரோடு அன்வாரின் புதல்வி நூருல் இஷாவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஃபிசி இங்கு களமிறங்கினால் ஒட்டுமொத்த நாடும் இங்கு கவனத்தைக் குவிக்கும். 

தற்போதைய சூழலில் ரஃபிசி அம்னோவின்மீது அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த ஆட்சியின்போது நிகழ்த்திய ஊழல்களை பட்டியல் போட்டு பலரது நிம்மதியைத் தொலைத்து வருகிறார்.

குறிப்பாக, போர்க் கப்பல் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பல முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறினார். அதன்பிறகு நடந்ததை அனைவருமே பார்த்தார்கள். காவல்துறை விசாரணை, அவரது கைப்பேசியை காவலதிகாரிகள் கைப்பற்றியது... என்று பலவும் நடந்தன.

இருப்பினும் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக இருந்து அவர் வெளிக் கொணரும் ஒவ்வொரு தகவலும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. 

இன்று இரவு ரஃபிசி என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

புகழேந்தி

தொடர்புடைய செய்திகள்

+ - reset