நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுகிறார்

புது டெல்லி:

தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் புதிய தலைவர்தான் ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகளை நிராகரித்துள்ள காங்கிரஸ் தலைமை, அசோக் கெலாட்டை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2020இல் அசோக் கெலாட்டுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடனும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பித்தது.

இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

அவர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், "ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சிக் கொள்கைப்படி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

அடுத்த முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான கருத்துகளைக் கேட்பதற்காக ராஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநிலப் பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால், அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

மாநில சட்டப்பேரவைத் தலைவரின் இல்லத்தில் கூடிய அவர்கள், மாநில துணை முதல்வர் சச்சின் பைலட்டை முதல்வராக்க  கூடாது எனக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றினர்.

மேலும், முதல்வர் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குப் பிறகே முடிவெடுக்க வேண்டும்; பைலட் ஆதரவு எம்எல்ஏக்களில் யாரையும் முதல்வராக்க கூடாது; மேலிடப் பார்வையாளர்கள் தனித்தனியாக இல்லாமல் எம்எல்ஏக்களிடம் குழுவாக கருத்துக் கேட்க வேண்டும் என மூன்று நிபந்தனைகளை விதித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாக்கன், பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மாக்கன், எம்எல்ஏக்களிடம் குழுவாக கருத்து கேட்க வேண்டும்; தலைவர் தேர்தலுக்குப் பிறகுதான் பேரவை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்தார்.

இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் மேலிடத்திடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் போட்டியில் இருந்து விலகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset