நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தொடர்புகள்..! - மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் / வெள்ளிச் சிந்தனை

1) சுயத்துடன் தொடர்பு (Know thyself)
2) மற்றவர்களுடன் தொடர்பு (Connection with others)
3) இறைவனுடன் தொடர்பு (Connection with Allah)

ஒருவரின் வெற்றியும் அவருடைய ஆளுமை முழுமை பெறுவதும் உறவுகள், தொடர்புகள் தொடர்பாக அவர் வைத்திருக்கின்ற செயல் திட்டத்தையும் கருத்தோட்டத்தையும்தாம் சார்ந்து இருக்கும். அவர் மனிதர்களை விட்டு விலகி தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு தனித்து வாழ்க்கையை ஓட்ட விரும்புகின்றாரா அல்லது மற்றவர்களுடனான உறவுகளையும் தொடர்புகளையும் நிறுவி இணைந்தும் இணங்கியும் வாழ விரும்புகின்றாரா என்பதைப் பொருத்தே அவருடைய ஆளுமை முழுமை பெறும்; அவருடைய வாழ்வும் சிறக்கும். 

உண்மை என்னவெனில் மனிதன் ஒரு சமூக படைப்பாக இருக்கின்றான். சமூகத்தில் பிறக்கின்றான். சமூகத்தில்தான் வளர்கின்றான். எனவே சமூகத்தைத் துறப்பதும், சமூகத்தை விட்டு விலகியிருப்பதும், சமூகத்தைப் புறக்கணிப்பதும் ஒரு குற்றமாகும். 

உறவுகளையும் தொடர்புகளையும் ஆய்ந்து பார்க்கின்ற போது மனிதனின் தொடர்புகள் மூன்று வகைப்பட்டவையாய் இருக்கின்றன என்பது தெரிய வரும். இந்த மூன்று வகையான தொடர்புகளும் நல்ல முறையில் வலுப்படுத்தப் படாத வரையில் மனிதனின் வாழ்க்கை அறுபட்ட பட்டமாகத்தான் இருக்கும். அந்த அறுபட்ட பட்டம் எங்கே போய் விழும்? ஏதேனும் வெட்ட வெளி மைதானத்திலா? மரத்திலா? இருப்புப் பாதையிலா? ஏதேனுமோர் மொட்டை மாடியிலா? சாக்கடை ஓடுகின்ற கால்வாயிலா? சலசலவென ஓயாமல் ஓடுகின்ற நதியிலா? யாருக்கும் தெரியாது. 

இங்கு இந்த மூன்று வகையான தொடர்புகள் குறித்தும் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றது. 

1) சுயத்துடன் தொடர்பு (Know thyself)

தன்னுடைய சொந்த ஆளுமையுடன் ஒருவருக்கு இருக்கின்ற தொடர்புதான் சுயத்துடன் தொடர்பு எனப்படுகின்றது. சுயத்தை அறிந்திருத்தல் என்றும் இதனைச் சொல்லலாம். எந்தவொரு மனிதனும் மற்றெல்லாவற்றைக் காட்டிலும் முதலில் தன்னைத்தானே அறிந்திருப்பது அவசியமாகும். முதலில் தன்னைத்தானே உணர்ந்துகொள்வது அவன் மீது கடமையாகும். சுயத்தைப் பற்றிய அறிமுகம் மனிதனுக்கு இன்றியமையாததாகும். 

அவன் தன்னுடைய தகுதிநிலையைக் குறித்தும், இறைவன் தனக்கு வழங்கியிருக்கின்ற மதிப்பு, மரியாதை குறித்தும் அறிந்திருக்கவில்லையெனில்  அவன் தன் மீதான பொறுப்புகளையும் கடமைகளையும் செம்மையாக நிறைவேற்றுவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தனக்கு இறைவன் அளித்திருக்கின்ற சிறப்பையும் மாண்பையும் அறியாதவனால் எப்படி இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக மிளிர முடியும்? 

கோஹினூர் வைரத்திற்கு தனக்குரிய மதிப்பு, மாண்பு, சிறப்பு, விலை பற்றி தெரிந்திருக்கவில்லையெனில் அதன் மீது குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் கோஹினூர் வைரத்திற்கு சிந்திக்கின்ற ஆற்றலோ திறனோ அறவே இல்லை. ஆனால் அதற்கு மாறாக ஒரு மனிதன் தனக்குரிய மதிப்பையும் மாண்பையும் சிறப்புத் தகுதியையும் அறியாதவனாக இருக்கின்றான் என்றால் அதனை எந்த நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றமாகத்தான் சொல்ல முடியும். 

சுயத்தைப் பற்றி அறிமுகத்தையும் விழிப்பு உணர்வையும் வளர்த்துக் கொள்வது மனிதன் மீதான கடமையாகும். வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன் இந்தப் பூமியில் மனிதனுக்கு எண்ணற்ற ஆற்றல்களையும் திறமைகளையும் அதிகாரங்களையும் அளித்திருக்கின்றான். 

பூமியிலும் வானத்திலும் இருக்கின்ற அத்துணை படைப்புகளும் அவனுக்கு சேவை செய்வதிலேயே எந்நேரமும் மூழ்கியிருக்கின்றன. சூரியனும் அவனுக்காகத்தான் நாள்தோறும் உதிக்கின்றான். நட்சத்திரங்களும் அவனுக்காகத் தான் ஜொலிக்கின்றன. மழையும் அவனுக்காகவே பொழிகின்றது. நீல வான ஓடையில் நீந்துகின்ற மேகங்களும் நீர் நிறைந்த கருமேகங்களும் அவனுக்காகத் தான் தவழ்ந்து தவழ்ந்து வருகின்றன. 

பூமியில் முளைத்து கிளை பரப்பி செழித்தோங்கி நிற்கும் மரங்களும் செடி கொடிகளும் அவனுக்காகவே வளர்கின்றன. விதவிதமான மலர்களும் வகைவகையான பூக்களும் அவனுக்காகத்தான் பூக்கின்றன. பறவைகள் அவனுக்காகவே கீச்சிடுகின்றன.
 
கருணைமிக்க இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற தனிப்பட்ட சிறப்புகளை வாரி வாரி வழங்கியிருக்கின்றான். மனிதனுக்கு எதனைக் குறித்தும ஆராய்ந்து பார்க்கின்ற திறனும், எதனையும் செய்வதற்கான நாட்டமும் முடிவெடுப்பதற்கான ஆற்றலும் இருப்பதைப் போன்ற செயல்படுவதற்கான சக்தியும் தரப்பட்டிருக்கின்றது. அவன் பார்க்கின்றான். கேட்கின்றான். புரிந்து கொள்கின்றான். மேலும் அவற்றைக் கொண்டு யாதொன்றைக் குறித்தும் சான்றுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கின்றான். 

அவனுடைய மனத்தில் பரிவும் கனிவும் இரக்கம் நிறைந்த உள்ளமும் இளகிய இதயமும் வைக்கப்பட்டிருக்கின்றது; அதே இதயத்தில் கோபத்தின் தீப் பொறியும் வைக்கப்பட்டிருக்கின்றது. அவனால் வெறுக்கவும் முடியும். நேசிக்கவும் முடியும்.

அவனிடம் இறைவனின் வழியில் அனைத்தையும் செலவிடுகின்ற பண்பும் வைக்கப்பட்டிருக்கின்றது. உலகையே துறந்துவிடுகின்ற தன்மையும்கூட. 

மனிதன் ஒரு மாறுபட்ட, வித்தியாசமான படைப்பு ஆவான் என்பதைத்தான் இந்தப் பண்புகள் அனைத்தும் உணர்த்துகின்றன. மற்றெல்லா படைப்புகளைக் காட்டிலும் மனிதனுக்கு தனிச் சிறப்பும் உயர் தகுதியும் தருவது இந்தப் பண்புகள் தாம். 

மனிதனுக்கு இந்தச் சிறப்புகளைக் குறித்தெல்லாம் அறிவோ, தெளிவோ இல்லாமல் போகுமேயானால் அவன் மிருகங்களைப் போன்றுதான் வாழ்வைக் கழிப்பான். வெறுமனே உண்ணுதல், பருகுதல், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளுதல் ஆகியவை மட்டும்தாம் தம்முடைய வாழ்வின் ஒரே குறிக்கோள் என்று அவன் நினைப்பான். மிருக நிலையிலிருந்து மேலெழுந்து சிந்தித்து, சீர் தூக்கிப்பார்த்து வாழ்வை அமைத்துக் கொள்வதில் அவன் மோசமாகத் தோற்றுப் போவான். 

ஐயத்திற்கிடமின்றி மனிதனுக்கு உடல் அருளப்பட்டிருக்கின்றது. அவனுக்கு பசியும் தாகமும் ஏற்படுகின்றன. ஆனால் அவன் வெறுமனே உடலாக மட்டும் இருப்பதில்லை. அதற்கு மாறாக உடலுக்கு முன்பு அவன் ஒரு ஆன்மாவும் கூட. ஆன்மாவின் சேவைக்காக வேண்டி பணிக்கப்பட்டதுதான் உடல். உண்மை என்னவெனில் 

'You are a soul with a body, not a body with a soul'. 
 
உண்மையில் மனிதன் ஒரு ஆன்மாவாகத்தான் இருக்கின்றான். ஆனால் உடலுக்கு முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக அவன் ஒரு உலகாயத படைப்பாக தேங்கி நிற்கின்றான். மேலும் இதுதான் அவனுடைய ஒழுக்க, தார்மீக, ஆன்மிக வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் ஆகும்.

ஆன்மாவுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தந்து ஆன்மாவின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுபவனாக ஆகிவிட வேண்டும் என்பதுதான் சூஃபிகள், இறைநேசர்கள், துறவிகள் போன்றோரின் அனைத்து உழைப்புக்கும் போராட்டத்துக்கும் மையப் புள்ளியாக, பயனாக இருக்கின்றது. ஆனால் பொதுவாக இந்த நோக்கம் நிறைவேறுவதே இல்லை. 

தனக்கான உடல் ரீதியான தேவைகளைக் காட்டிலும் தன்னுடைய ஆன்மாவின் தேவைகளை கவனத்தில் கொள்வதில் மனிதனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக ரமளான் மாதம் முழுவதும் ஒதுக்கப்பட்டது. உண்மை என்னவெனில் ஆன்மாவை மையமாகக் கொண்ட வாழ்வாக தனது வாழ்வை ஆக்கிக் கொள்ளாத வரையில் மனிதனின் தேவையாக இறைவன் ஆவதேயில்லை. அதற்குப் பதிலாக மனிதன் தன்னுடைய உலகாயத தேவைகளை நிறைவேற்றுவதிலேலேய இலயித்து, மன நிறைவடைந்து இருப்பான். 

மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்கின்ற போது, தன்னுடைய சிறப்புகள், தகுதிகள் குறித்த உணர்வு அவனுக்குக் கிடைக்கின்ற போது அவன் எந்நேரமும் இறைவனுக்கு முன்னால் சிரம் பணிந்த நிலையில் வாழத் தொடங்கிவிடுகின்றான். அதன் பிறகு அவன் முழுக்க முழுக்க இறைவனின் கட்டளைகளின்படி தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் அமைத்துக் கொள்ளத் தொடங்கிவிடுகின்றான். ஒழுக்க, ஆன்மிக தேவைகளை அவன் புறந்தள்ளுவதில்லை. உலகாயத நோக்கை, உலக வளங்களின் பின்னால் அலைகின்ற உலகத்தை மோகித்து வாழ்கின்ற நடத்தையை முற்றாகத் துறந்துவிட்டு அல்லாஹ்வின் உவப்பைப் பெற விரும்புபவனாக மாறி விடுகின்றான். இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக வாழத் தொடங்கி விடுகின்றான். 

2) மற்றவர்களுடன் தொடர்பு (Connection with others)

 மற்ற மனிதர்களுடன் மக்கள் ஏற்படுத்திக் கொள்கின்ற உறவுகளும் தொடர்புகளும்தாம் இரண்டாம் வகையான தொடர்பு ஆகும். எந்த நிலையிலும் பிற மனிதர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டே விடுகின்றது. ஏனெனில் நம்மால் சமூகத்தை விட்டு விலகி, அறுபட்டு வாழ முடியாது. அதே பிற மனிதர்களுடனான இந்த உறவும் தொடர்பும் எந்த அடிப்படைகளில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதுதான் இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும். 

மற்றவர்களுடனான நம்முடைய தொடர்பின் அடிப்படைகளாக கண்ணியம், பணிவு, அடக்கம் ஆகியவைதாம் இருந்தாக வேண்டும். இந்த ஒழுக்க அடிப்படைகள்தாம் நம்மை பிற மனிதர்களோடு பிணைக்கக் கூடிய ஆற்றல் படைத்தவை; அந்தத் தொடர்புகள் நிலைத்திப்பதற்கு அடிப்படைகளாய் இருப்பதும் இவைதாம்.
 
மற்ற மனிதர்கள் என்று சொல்கின்ற போது அவர்களில் நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்; அண்டை வீட்டாரும், இந்த உலகில் வசிக்கின்ற அத்துணை மனிதர்களும் அவர்களில் இருப்பர். ‘மற்ற மனிதர்களில்’ நம்முடைய நண்பர்களும் இருப்பார்கள்; பகைவர்களும்கூட. அவர்களில் நாம் ஒப்பந்தம் செய்து இணக்கத்துடன் வாழ்கின்ற மனிதர்களும் வருவார்கள்; நாம் போரிட்டுக்கொண்டிருக்கின்ற மனிதர்களும் வருவார்கள். 

ஒருவர் எந்த வயதுடையவராக இருந்தாலும் சரி, அவருடனான நம்முடைய தொடர்பின் வடிவம் எத்தகையதாக இருந்தாலும் சரி, அந்தத் தொடர்புகள் ஒருபோதும் கோபத்தின் அடிப்படையிலோ, ஆணவத்தின் அடிப்படையிலோ கட்டமைக்கப்படுதல் கூடாது. அதற்குப் பதிலாக கண்ணியமும் ஒழுக்க மாண்புகளும்தாம் அவற்றுக்கான அடிப்படைகளாக இருக்கும். 
இன்னும் சொல்லப் போனால் நாம் எதனைக் குறித்தும் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு முன்பு எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணியம், ஒழுக்கம் ஆகியவற்றின் தேவைகளைத்தான் கவனத்தில் கொண்டாக வேண்டும். 

நம்முடைய வாழ்வில் பிற மனிதர்களுடனான நம்முடைய தொடர்புகளில் மனிதத் தொடர்பு பற்றிய இந்த அடிப்படையான விதிøயைப் புறக்கணிக்காமல் பேணுதலுடன் நடந்துகொண்டோம் எனில் நமமுடைய தொடர்புகள் அனைத்தும் உண்மையான பொருளில் ஆகுமானவையாய், உண்மையான அடிப்படைகளில் நிறுவப்பட்டவையாய் மிளிரும்.
 
3) இறைவனுடன் தொடர்பு (Connection with Allah)

நாம் நம்முடைய அதிபதியுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற தொடர்புதான் மூன்றாவது வகையான தொடர்பு ஆகும். அல்லாஹ்வுடன் நாம் ஏற்படுத்திக் கொள்கின்ற தொடர்பில் இருக்கின்ற இனிமையும் ருசியும் எந்த அளவுக்குத் தனித்துவம் நிறைந்தவை எனில் அவற்றைத் துல்லியமாக, சரியாக விவரிப்பதற்கு நமக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அகராதியில் இருக்கின்ற எந்தவொரு சொல்லைக் கொண்டும் அதனை விவரிக்க முடியாது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டுவதற்காக சொற்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கின்றது. நம்முடைய இந்தியாவில் ரிஷிகள் இதனை விவரிப்பதற்கு ஆண்டிருக்கின்ற சொல் ‘சமாதி’ ஆகும். 

ஐயத்திற்கிடமின்றி அல்லாஹ்வின் நினைவால்தான் மனித மனங்களில் நிம்மதியும் மன நிறைவும் ஏற்படுகின்றன. ஆன்மாவுக்கு ஆறுதல் கிடைப்பதும் இறைவனின் நினைவால்தான். ஒழுக்கத்தில் உறுதியும் வலிமையும் உண்டாவதும் இறைவனின் நினைவால்தான். 

மனித வாழ்வில் அல்லாஹ்வுடனான மிக மிக நெருக்கமான தொடர்பு நிலைப்பெறும்போது தான் ஆளுமை முழுமை பெறுகின்றது. அல்லாஹ்வின் அவையில் அவனுக்கு முன்னால் மனிதன் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுகின்ற தன்மையை அடையாத வரையில் எந்தவொரு மனிதரும் ஒரு விதமான மோசடிக் கறை படர்ந்தவராகத்தான் இருப்பார்.

நாம் இறைவனின் கட்டளைகள் அனைத்தையும் ஏற்று நடந்த பிறகும்,  அவனுடைய கோபம், சீற்றம் ஆகியவற்றைக் குறித்து நடுநடுங்குபவர்களாய், அவனுடைய உவப்பைப் பெற வேண்டுமே என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்தவர்களாய் இருக்கின்றோம்.

அல்லாஹ்வின் நினைவே நம்முடைய ஆன்மாவுக்கான வலுவான பக்கபலமாகிவிட வேண்டும். 

அவனுடைய நெருக்கத்தில் நமக்கு இளைப்பாறுதலும் நிம்மதியும் கிடைக்கின்ற போதுதான் அவனுடன் உண்மையிலேயே தொடர்பை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று கருதவேண்டும். 

இன்னொரு முக்கியமான விஷயம் விடுபட்டுவிட்டது. அதாவது அல்லாஹ்வின் திட்டத்தை - ஸ்கீமை நடைமுறைப்படுத்துவதில் நாம் அவனுக்கு ஒத்துழைப்பாளர்களாய் மாறாத வரையில் அவனுடான நம்முடைய உறவும் தொடர்பும் அரைகுறையானதாய், முழுமை பெறாததாய்த்தாம் இருக்கும். 

- மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

தமிழில்: லுத்ஃபுல்லாஹ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset