நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சிங்கப்பூர்

அண்மைக் காலமாக, உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி.

வளர்ந்த நாடுகளும்கூட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்படும் வேளையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.

சாலைகள்தோறும் திறந்தவெளி உணவகங்கள், அவற்றில் பரிமாறப்படும் விதவிதமான உணவு வகைகள், நிறைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்பது சிங்கப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக இன்றளவும் நீடித்து நிற்கிறது.
இந்நிலையில்,  அந்தத் தீவு நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறித்த பேச்சும் கவலையும் அதிகரித்துள்ளது.

இறக்குமதியை நம்பியுள்ள சிங்கப்பூர்:

உலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் மிகவும் குறைவு. இதனால் தனது உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்ள 90 விழுக்காடு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதற்காக சுமார் 170 நாடுகளைச் சார்ந்துள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக, உலகெங்கும் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

அந்த வகையில் சிங்கப்பூரில் உணவுப் பொருட்களின் விலை, ஒப்பீட்டு அளவில், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 4.1%ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இது 3.3% ஆக இருந்தது என சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணிக்கவும் 'சிங்கப்பூர் உணவு முகமை'யை (Singapore Food Agency)  கடந்த ஆண்டு அமைத்தது சிங்கப்பூர் அரசு. தற்போது இத் தீவு நாட்டின் உணவு உற்பத்தி பத்து விழுக்காடாக உள்ள நிலையில், அதை 30 விழுக்காடாக அதிகரிப்பது என்பது இந்த முகமையின் பணிகளில் ஒன்றாக உள்ளது.

இதையடுத்து, பல்வேறு விதமான பண்ணைகள் தொடங்கி ஹைட்ரோபோனிக்ஸ் வரை அனைத்து விதமான நவீன உத்திகளிலும் முதலீடு செய்கிறது சிங்கப்பூர் அரசு.\

Countries Who Import the Most Food Relative to Merchandise Imports -  WorldAtlas

ஏற்றுமதி தடைகளால் கவலைப்படும் சிங்கப்பூர்:

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள், உள்நாட்டுத் தேவையை முதலில் ஈடுகட்டும் விதமாக பல்வேறு உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான வேளையில், பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தோனீசியா.

மறுபக்கம், மலேசியாவும் கோழிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. சிங்கப்பூருக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏனெனில், இத்தீவு நாட்டின் கோழிகளுக்கான தேவையில் சுமார் 34 விழுக்காட்டை பூர்த்தி செய்வது மலேசியாதான். 48% கோழிகள் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மலேசியாவில் இருந்து புதிதாக கோழிகளை இறக்குமதி செய்ய முடியாவிட்டாலும், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கோழிகளை வைத்து நிலைமையைச் சமாளிக்கிறது சிங்கப்பூர். ஆனால், அந்த கோழிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளில் வழக்கமான சுவை இல்லை என வாடிக்கையாளர்கள் புலம்புவதாக உணவகம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலை, முப்பது முதல் 45 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, உணவுகளின் விலையை உயர்த்தாமல் இருப்பது இயலாத காரியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அண்மையில் தனது உணவகத்தில் பரிமாறப்படும் சில உணவு வகைகளின் விலையை உயர்த்தியபோது வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கமும் அச்சமும் தமக்கு இருந்ததாகச் சொல்கிறார் சிங்கப்பூரில் ஜப்பானிய உணவகத்தை நடத்தி வரும் சியோ.

உணவு வகைகளின் விலையை குறைந்தபட்சம் 20 முதல் 35 விழுக்காடு வரை உயர்த்தினால் மட்டுமே இத்தொழிலில் தாக்குப்பிடிக்கவும் நிலைத்து நிற்கவும் முடியும் என்ற நிலை காணப்படுவதாக சியோ சொல்கிறார். ஆனால், இந்த அளவு விலையை உயர்த்தும் பட்சத்தில், தமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களா எனும் சந்தேகம் எழுவதாக அவர் கவலைப்படுகிறார்.

உணவுப் பண வீக்கத்தின் தாக்கத்தை உணர்கிறது சிங்கப்பூர்:

உணவுப் பண வீக்கத்தின் (food inflation) தாக்கத்தை சிங்கப்பூரர்கள் நன்கு உணர்ந்து வருவதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அனைத்துலக அளவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், உக்ரேன், ரஷ்யா போரின் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. எனவே, உணவுப் பற்றாக்குறை என்பது அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

சில நாடுகள் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன எனில், அதனால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை வேறு நாடுகளின் மூலம் நிரப்பிவிட இயலாது என்பதையும் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரஷ்யா, உக்ரேன் நாடுகளால் உணவு, உணவுப்பொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு ஏற்பாடுகளின் மூலம் நிரப்ப குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஏற்றுமதி தொடர்பாக உக்ரேனுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அனைத்துலக உணவு விநியோகச் சங்கிலிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருக்க, உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டாலும்கூட, உணவுப்பொருட்களின் விலைகள் போருக்கு முந்தைய நிலைக்கு உடனடியாகத் திரும்ப வாய்ப்பில்லை என்பதும் பொருளியல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியன ஏற்கெனவே நிலவும் உணவுப் பற்றாக்குறையையும் உணவுப் பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதே இந்நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

உணவுகளின் விலை சுமார் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சவாலான சூழ்நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் தன் குடிமக்களுக்கான உணவுப் பாதுகாப்பை நல்லவிதமாக உறுதி செய்து வருகிறது என்றபோதிலும், அதன் எதிர்கால நிலை குறித்து இப்போதே கணிக்க இயலாது என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

CNA Explains: Where does Singapore get its food from? - CNA
 

30க்குள் - 30 : சிங்கப்பூர் அரசாங்கம் நிர்ணயித்துள்ள புதிய இலக்கு

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 30க்குள் - 30 (30 by 30) என்ற திட்டத்தை வகுத்துள்ளது.

இந்த சுய உற்பத்தித் திட்டமானது, நெருக்கடியான தருணங்களில் ஓரளவு கைகொடுக்கும் என்றாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைந்துவிடாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியையும், குடும்பங்களின் சராசரி வருமான்தையும் அதிகரிப்பதற்கான திட்டங்களில் முதலீடு செய்வதிலேயே சிங்கப்பூர் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. மாறாக, வேளாண் நடவடிக்கைகளில் முதலீடுகள் செய்யப்படவில்லை.

"எனவே, பணம் இருக்கும் வரையிலும் விநியோகச் சங்கிலியில் எந்தவித தடையும் ஏற்படாத வரையிலும் தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய இயலும் என்பதே சிங்கப்பூர் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கக்கூடும்," என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் செயற்கை உணவுப் பொருள் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, மிகப்பெரிய செயற்கைக் கோழி இறைச்சி உற்பத்தி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது.

முப்பது விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்துக்கு இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கும் என்றாலும், இயற்கையான உணவுக்கு முன்னுரிமை என்று மக்கள் முடிவெடுக்கும்போது சிக்கல் எழக்கூடும்.

மேலும், உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களின் விலையானது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களைவிட குறைவாக இருப்பதும் முக்கியம். இல்லையெனில், மக்கள் உள்நாட்டு உணவுப் பொருட்களை ஒதுக்கும் வாய்ப்புண்டு. இல்லையெனில், அப்பொருட்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டியிருக்கும் என்பதும் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

10 Singapore Food Bloggers, and Their Favourite Local Hawker Food –  DanielFoodDiary.com

உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் சிங்கப்பூர்:

உணவுப் பற்றாக்குறையை சிங்கப்பூர் எப்படி சமாளித்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக உருவெடுத்துள்ளது.

உணவுப் பற்றாக்குறை எனும் பிரச்சினை தலைதூக்கும் என்பதை முன்கூட்டியே சிங்கப்பூர் கணித்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். எனவே, உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி தடை சிங்கப்பூருக்கு கவலை தந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவு, உணவுப்பொருட்களைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு தற்போதைய நிலை நிச்சயம் பெரும் சவாலாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், கொரோனா கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கிய நாள் முதலே, இதுபோன்ற பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளதை சிங்கப்பூர் எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இன்று அந்நாடு உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க காரணமாக அமைந்தன.
கோழி, முட்டை, காய்கறிகள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை முன்பே கணித்த சிங்கப்பூர் அரசு, அவற்றின் கையிருப்பு அளவை அதிகப்படுத்தி உள்ளது. வழக்கமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளைத் தவிர, மேலும் பல பகுதிகளில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

பிரேசில், உக்ரேன், போலந்து ஆகிய நாடுகளில் இருந்து கோழிகளையும் முட்டைகளையும் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ள சிங்கப்பூர், காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்ற சில நாடுகளை அடையாளம் கண்டு இறக்குமதியாளரை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

- பிபிசி தமிழ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset