நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கால் போட்ட மதுவில் பித்தம் கொண்டவன்; கால் நீக்கிய மாதுவில் சித்தம் தெளிந்தவன்: இன்று கண்ணதாசன்பிறந்த நாள் 

தத்து கொடுக்கப்பட்ட எட்டாவது பிள்ளையான முத்தையா, உலகெங்கும் பரவி நிரவி வாழும் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்டு, தத்தம் நெஞ்சத்து அறைகளில் பதியம் செய்யப்பட்டவர்; அந்த முத்தையாதான், கவியரசு கண்ணதாசன்.

பருவ மங்கையர்பால் மங்காத மயக்கம் கொண்டவர் கவியரசர் கண்ணதாசன் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அதில் ஓரளவு பொருளும் உண்டு. ஆனால், அக் கவிப் பெருமகனார்,  பெண்மையை தொடக்கம் முதல் முடிவு வரை தன் பாவரிகளால் படம் பிடித்து அவற்றை இலக்கியச் செப்பேடுகளில் பதித்தவர் என்பதுதான் உண்மை.

பெண்மையின் பருவங்களான அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என்னும் ஏழு நிலைகளையும் கடந்து பெண்மையை தன் பேனா முனையென்னும் உளியால் செதுக்கியவன் கண்ணதாசன். ‘காலமிது காலமிது மண்ணூறங்கு மகளே” என்றப் பாடலை நிதானமாகக் கேட்போருக்கு இது பொருள் பொதிய விளங்கும்.

இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க் கவிஞன்  கவியரசு கண்ணதாசன். செம்மொழியான தமிழ் மொழி, கவிதை வடிவில் உயரமான பரணில் இருந்தது. அத்தகையத் தமிழைத் தரையில் இறக்கி வைத்தவன் மாகவி பாரதி. அதை இன்னும் எளிமைப்படுத்தி வீதியில் உலாவ விட்ட பாவலன் கண்ணதாசன். சொல்லில் எளிமையும் கருத்தில் வலிமையும் சேர்த்து சுவைபடப் பாடல்களை எழுதியப் பெருமை  கண்ணதாசனைச் சேரும்.

வாழ்க்கைப் பயண வீதியில் ஓரோரம் அமர்ந்து மதுக் கிண்ணம் ஏந்தும் மனிதனை பரவசம் பற்றிக் கொள்ளும். ஆனால், கண்ணதாசனின் நெஞ்சத்தில் மதுக் கோப்பை மஞ்சம் கொண்டால் அப் பாவலப் பெருமகனின் எழுதுகோல் வஞ்சியின் உருவெடுக்கும்.  பின் என்ன? அவ்வஞ்சியுடன் கொஞ்சி விளையாட வாலைத் தமிழ் அஞ்சாது. அப்போது கண்ணதாசனின் எண்ணப் பெருக்கெல்லாம் வண்ணச் சொற்களாக வடிவெடுத்து பாடல் வரிகளாக வரிசைப் பிடிக்கும்.

சிறுகூடல் பட்டியில் இடை நிலைக் கல்வியைக்கூட எட்டாத ஒரு கவிமகனால்,  ‘எறும்பு தோலை உரிக்க ஒரு யானை வந்ததடா’; ‘கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’; ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றல்’; ‘இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம்’; ‘உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’; ‘கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன்’; ‘விதியென்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை’; ‘அத்தான் என் அத்தான்’; ‘தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்கு கன்னி, பட்டினிக்கு தீனி, கெட்ட பின்பு ஞானி’; - என்றெல்லாம் எழுத முடிந்ததற்குக் காரணம், கண்ணதாசனின் தமிழியத் தேடலுக்குப் பின் சமூக சிந்தனையன்றி வேறென்ன?

பட்டினத்தாரின் சந்தப்பா இலக்கியம், கம்பனின் இராமாயணம், வள்ளலாரின் திருவருட்பா, திருவள்ளுவரின் திருக்குறள், பாரதியார் படைப்பு என்றெல்லாம் ஒன்று விடாமல் கற்றுத் தெளிந்தவர் கண்ணதாசன்.

ஆயினும் தனிப்பட்ட முறையில், நேற்றொரு கொள்கை, இன்றொரு மாற்றம் என வாழ்ந்தவர்; அரசியலிலும் அப்படித்தான். ஈ.வி.கே. சம்பத்துடன் அவர் அணி காணாமல் இருந்திருந்தால், உறுதியாக அமைச்சர் ஆகியிருப்பார்.

நேற்று தன்னால் தூற்றப்பட்டவருக்கு இன்று நேரில் மலர் மாலை; - என்று மனிதர்களை மாறி மாறி போற்றியும் தூற்றியும் வாழ்ந்தவர் கண்ணதாசன். தமிழ் தேசியமாயினும் இந்திய தேசியமாயினும் சமயக் கொள்கையாக இருந்தாலும் அத்தனையிலும் முன்னும் பின்னுமாக பேசி, மாற்றியும் திருப்பியும் தன் கருத்தைப் பதிவு செய்தவர் கண்ணதாசன்.

‘விதி’ என்ற சிந்தனையைக்கூட புரட்டிப் புரட்டிப் போட்ட பாவலன் கண்ணதாசன். ‘விதியென்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கை இல்லை, உடலுண்டு உள்ளமுண்டு, முன்னேறு மேலே மேலே’; என்று ‘சொர்க்கம்’ திரைப்படத்தில் சொன்ன அதேக் கண்ணதாசன் ‘நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை, விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?’ என்று தியாகம் திரைப்படத்தில் பாடல் எழுதி இருக்கிறார்.

‘கம்ப ரசம்’ இயற்றிய அண்ணாவிற்குப் போட்டியாக தானும் கம்ப இராமாயணத்தைப் படிக்க முனைந்த கண்ணதாசன், அப்படியே வெகுதூரம் கடந்துவிட்டார். கடைசியில் திசைமாறியும் சென்று விட்டார். இப்படியெல்லாம் வாழ்ந்த கவியரசு கண்ணதாசனுக்கு இந்த மண்ணில் தமிழும் தமிழரும் நிலைக்குமளவு அவர்தம்புகழும்  நிலைபெற்று இருக்கும்; அந்த அளவிற்கு அவருக்கு பெருமை சேர்ப்பது அவரின் பாடல் வரிகள்தான். அப்படிப்பட்ட கண்ணதாசனுக்கு ஜூன் 24, பிறந்த நாள்.

-நக்கீரன்
கோலாலம்பூர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset