நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மன்னிப்பவன் மனிதன்; மன்னித்துக்கொண்டே இருப்பவன் இறைவன்: ரமலான் சிந்தனை

'அஃபுவ்வுன்' என்பதும் இறைதிருநாமங்களில் ஒன்று. திருப்பெயர் இடம்பெற்ற இறைவசனம் இது : 'நிச்சயமாக இறைவன் பிழைகளைப் பொறுப்பவன், பெரும் மன்னிப்பாளன்!' [குர்ஆன் 22 : 60] 

ஃஙஃபூர், ஃஙாஃபிர், ஃஙஃப்பார், அஃபுவ்வு... எல்லாமே மன்னிப்பவன் என்ற அர்த்தத்தைக் கொண்டிருந்தாலும் ஃஙஃபூர் என்பது பாவத்தை மறைத்துவிடல். அஃபுவ்வு என்பது பாவத்தை அறவே இல்லாமல் அழித்துவிடல். 

▪︎இரு வகையான மன்னிப்புகள் 

01. இறைநிராகரிப்பாளர்கள் பிற குற்றவாளிகள் அனைவருக்குமான பொதுவான மன்னிப்பு. அவர்கள் இணைவைப்பு இன்ன பிற பாவங்களில் ஈடுபட்டாலும் அவர்களைத் தண்டிக்காமல் தனது அருட்கொடைகளை வழங்குவான். அவர்களுக்காக வாழ்வியல் வசதிகளை ஏற்படுத்தித் தருவான். 

02. இது தனிப்பட்ட இறைமன்னிப்பு. பாவம் செய்து பின்னர் அதிலிருந்து மீண்டு அதில் நிலைத்திருக்காமல் தன் பக்கம் திரும்பிய நல்லடியாருக்கு இறைவன் வழங்குகிறான். 

'இறைத்தூதரே கூறும் : தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட என் அடியார்களே! (பாவம் செய்தும் பாவிகளே என்று அழைக்காமல், எனது அடியார்களே என அழைக்கும் இறை அன்பைக் கவனிப்போம்!)  இறைவனின் கருணையில் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். நிச்சயமாக இறைவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். அவன் பெரும் மன்னிப்பாளன், இணையிலாக் கருணையாளன்.'[குர்ஆன் 39 : 53] 

▪︎திறந்தே இருக்கும் மன்னிப்பின் வாசல் 

இறைவன் பகல் குற்றவாளிகளுக்காக இரவில் தனது கைகளையும் இரவுக் குற்றவாளிகளுக்காக பகலில் தனது கைகளையும் இறைவன் விரித்து வைத்திருக்கிறான் என்பது நபிமொழி.கடலளவு, மலையளவு, வானளவு, மண்துகள்கள் அளவு பாவம் செய்தாலும் அவற்றையும் மன்னிப்பவன் இறைவன். நூறு கொலைகளைச் செய்தவனையும் மன்னித்து அருள்புரிந்தவன் அல்லவா, அவன்!காணாமல் போன ஒட்டகை திரும்பக் கிடைத்தவன் மகிழ்ச்சியுறுவது போல, பாவமன்னிப்புக் கோரி தன் பக்கம் மீண்டவன் விசயத்தில் மகிழ்ச்சியுறுபவன், அல்லவா அவன்! 

▪︎மன்னிப்பதில் மனிதனும் இறைவனும் 

தவறிழைக்கும்போது ஒருமுறை அல்லது இருமுறை அதிகபட்சமாக மூன்றுமுறை நாம் பிறரை மன்னிக்கலாம். ஆனால், இறைவன் மன்னிக்கிறான், மன்னிக்கிறான், மன்னிக்கிறான். மீண்டும் மீண்டும் மன்னிக்கிறான். அந்த அளவுக்கு அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 

▪︎பெறவேண்டிய பாடங்கள் படிப்பினைகள் 

நாம் உண்மையான இறைநம்பிக்கையாளர் என்றால், எப்போதும் பிறரது நன்மைகளையே வெளிப்படுத்த வேண்டும். அவர்களது குற்றங்கூறைகளை மறைத்து மன்னித்து விடவேண்டும். யாரையும் குற்றம் கண்டு பிடிக்கும் கண்ணோடு பார்க்கக்கூடாது. 

▪︎பிறரை மன்னிக்கப் பழகுவோம்! 

நாம் நமது இதயங்களில் பல மனவருத்தங்களை சுமந்து கொண்டு அலைகிறோம். குடும்பத்தினர், உறவினர், அண்டை அயலார் எல்லாரிடமும் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து நமது இதயங்களைச் சுத்தம் செய்துவிட்டு இரவில் நாம் உறங்கச் செல்லவேண்டும். 

அதிக மன்னிப்பாளனாகிய இறைவனை எண்ணிப் பார்த்து எல்லாரையும் நாம் மன்னிக்கப் பழகவேண்டும். நாம் தவறு செய்துவிட்டு அவற்றை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டுகிறோம். பிறர் நம்மிடம் தவறாக நடக்கும்போது நாம் அவர்களை மன்னிக்க வேண்டாமா? பிறரை மன்னிப்பது மட்டுமல்ல, நாம் தவறு செய்து விட்டால், பிறரிடம் மன்னிப்புக் கேட்கவும் தவறக்கூடாது. 

▪︎தவறிழைத்தால் உடனே ஒரு நன்மை செய்வோம் 

மனிதன் என்ற முறையில் நாம் சிலவேளை தவறிழைத்து விடலாம். அது மனித இயல்பு. ஆனால், தவறு என உணரும்போது உடனே அதற்காக வருந்த வேண்டும்;
இறையிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன் என உறுதி எடுக்கவேண்டும். இவற்றுடன்... தவறுக்குப் பரிகாரமாக உடனே ஒரு நன்மையைச் செய்து விடவேண்டும். இது நபி வழிமுறை. 

கட்டுரையாளர்: கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

தொடர்புடைய செய்திகள்

+ - reset