நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடல் நல்லுள்ளம் கொண்டோரின் உதவியால் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது

ஜொகூர்பாரு:

மலேசியாவில் வேலைக்காக வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார்.

பண வசதி இல்லாத காரணத்தால் அவரது உடல் 21 நாட்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

பல தரப்பினரின் உதவியால் மருத்துவமனை கட்டணம் செலுத்தப்பட்டு, இன்று இந்து சமய முறையின்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது.

உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் கடந்த 16.10.2025 அன்று மலேசியாவிற்கு வந்து ஜொகூரில் உள்ள இந்திய உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

பின்னர் அந்த வேலையை விட்டு சிறிய வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக அந்த பெண் கடந்த 02.05.2026 அன்று சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18.05.2026 அன்று உயிரிழந்தார்.

மருத்துவமனை கட்டணம், இறுதிச்சடங்கு செலவுகளை ஏற்பாடு செய்ய முடியாததால் அவரது உடல் 21 நாட்கள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அவரது கணவர் சாலையோரத்தில் தங்கி தவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சவப்பெட்டி சேவையாளர் மகேனை தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மகேன் தேசிய மஇகா தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மூலம் ஜொகூர் மாநில பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி அவர்களை அணுகி உதவி கோரியதாக கூறப்படுகிறது.

பின்னர், ரவீன் குமாரின் சிறப்பு அதிகாரி சுப்ரமணியம், மருத்துவமனையின் நிதி அதிகாரி நிர்மலாவுடனும், மருத்துவமனை பார்வையாளர் அதிகாரி அறுமுகமுடனும் கலந்துரையாடி, மருத்துவ கட்டண விவகாரத்தில் உதவ நடவடிக்கை எடுத்தார்.

இதன் மூலம் 8 ஆயிரத்து 547 ரிங்கிட் மருத்துவக் கட்டணம் 4 ஆயிரம் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து, ரவீன் குமார் சார்பில் 4 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டு மருத்துவமனை கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டது.

மேலும், இறுதிச்சடங்கு செலவுகளுக்காக மகேனின் நண்பர்கள் 3 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை திரட்டி உதவியுள்ளனர். இதையடுத்து, 21 நாட்கள் பிணவறையில் இருந்த மறைந்த பெண்ணின் உடல் இன்று நல்லுள்ளம் கொண்டோரின் உதவியுடன் இந்து சமய முறையின்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இவ்வேளையில், இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த தேசிய ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ ச. விக்னேஷ்வரன், ஜொகூர் மாநில பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவருக்கும் மறைந்த பெண்ணின் கணவர் சரவணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset