நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘என்மீது சுமத்தப்பட்டவை அனைத்தும் அவதூறு': 14 நாட்கள் மர்மமாக காணாமல் போன ஜாஸ்லிண்டா உருக்கமான விளக்கம்

தாப்பா: 

14 நாட்கள் காணாமல் போய் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுடின், மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று தாப்பா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

49 வயதான ஜாஸ்லிண்டா, தனது கணவர் ஹாஸ்ஸ்மான் ஒஸ்மான் (61) உடன் மதியம் 1.50 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறினார். பெண்கள் வார்டு சுகாதாரப் பணியாளர்கள் அவரை வழியனுப்பினர்.

இடது காலில் கட்டுப் போடப்பட்ட நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் வெளியே வந்த ஜாஸ்லிண்டா, தனது பாதுகாப்பிற்காக இடைவிடாது பிரார்த்தித்த மலேசிய மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அதேவேளை, தனது காணாமல்போன சம்பவம் தேடல், மீட்புப் படையினருக்குப் (SAR) பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்த அவர், மன்னிப்பும் கோரினார்.

“என்மீது கூறப்படுவது அனைத்தும் அவதூறு”

சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் குறித்து பதிலளித்த ஜாஸ்லிண்டா, தன்மீது சுமத்தப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்தார்.

“அல்ஹம்துலில்லாஹ்... நான் நலமாக இருக்கிறேன். எனக்காக பிரார்த்தித்த அனைத்து மலேசிய மக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

“என்னைப் பற்றிக் கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் அவதூறுகள். அதுகுறித்து பின்னர் விரிவான விளக்கத்தை வழங்குவேன்.

“தேடல், மீட்புப் படையினருக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருக்கும் தொந்தரவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை,” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, கம்போங் லுபுக் கஹாரு, போஸ் மூசோ அருகே உள்ள சுங்கை வோ பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு கிராமவாசிகளால் ஜாஸ்லிண்டா கண்டுபிடிக்கப்பட்டார்.

கூனோங் பாத்து பூத்திட் மலையில் ஏறிச் சென்ற அவர் காணாமல் போன 14ஆவது நாளில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

மே 25 முதல் ஜூன் 3 வரை பெரிய அளவிலான தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் சிறிய அளவிலான SAR நடவடிக்கை தொடர்ந்த மூன்றாவது நாளிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜாஸ்லிண்டாவின் மீட்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது காணாமல்போன சம்பவத்தைச் சுற்றியுள்ள மர்மம் குறித்து அவர் விரைவில் விளக்கம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது பலரிடமும் எழுந்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset