செய்திகள் மலேசியா
சுங்கை தெக்காலியில் ‘4 மாடி ஃபிளாட்': ரோஹிங்கியா குடியேற்றம் குறித்து பரபரப்பு கேள்விகள்
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட்டின் சுங்கை தெக்காலி பகுதியில், ரோஹிங்கியா இனத்தவர்கள் நான்கு மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைப் போன்ற கட்டடத்தைச் சட்டவிரோதமாக அமைத்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம், வானொலி அறிவிப்பாளரும் நடிகருமான அஸாட் ஜாஸ்மின் அல்லது ‘பாக் அஸாட்’ தற்செயலாக அப் பகுதியைக் கடந்து சென்றபோது பதிவு செய்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.
வைரலான அந்தக் காணொலியில், கூரையால் மூடப்பட்ட நடைபாதைகள், முறையாக சிமெண்ட் பூசப்படாத செங்கல் சுவர்கள், சந்தேகத்திற்கிடமான நீர் குழாய் இணைப்புகள், மின்சார வயரிங் வசதிகளுடன் காணப்பட்ட பல்மாடிக் கட்டட அமைப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரமலான் மாதத்திற்கு முன்னர் ஹுலு லங்காட்டில் ராயா பாடல் காணொலி படப்பிடிப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வழி தவறி மாற்றுப் பாதையில் சென்றபோது இந்தக் கட்டடத்தைக் கண்டதாக அஸாட் தெரிவித்தார்.
“முதலில் இது குறைந்த வருமானம் கொண்ட மக்களின் குடியிருப்பாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் அருகில் சென்று பார்த்தபோது, அதன் வடிவமைப்பும் கட்டுமான முறையும் மிகவும் வித்தியாசமாகவும் மர்மமாகவும் தோன்றியது.
“அந்தக் கட்டடம் அங்கு வசிப்பவர்களாலேயே படிப்படியாக கட்டப்பட்டதுபோல் தெரிந்தது. அதனால்தான் அதனை காணொலியாக பதிவு செய்தேன்,” என்றார் அவர்.
மேலும், அங்கு ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆண்கள் சிலர் நடமாடியதையும் தாம் கண்டதாக அவர் கூறினார்.
அந்தக் கட்டடத்தின் கட்டுமானத் தரம், பாதுகாப்பு அம்சங்கள், மின், நீர் இணைப்புகள் தொடர்பாக பல கேள்விகள் எழுவதாகக் குறிப்பிட்ட அஸாட், கட்டடக் கலைஞர்களிடம் கருத்து கேட்டபோதும் அவர்களும் அதனை சந்தேகத்திற்கிடமான அமைப்பாகவே கருதியதாக தெரிவித்தார்.
எனினும், அந்தக் குடியேற்றத்தின் உண்மையான நிலை குறித்து எந்தவித குற்றச்சாட்டையும் முன்வைக்க விரும்பவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நான் எதையும் திட்டமிட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வரச் செல்லவில்லை. தற்செயலாக அந்தப் பகுதியைக் கண்டேன். சட்ட மீறல் ஏதேனும் இருந்தால், அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு,” என்றார்.
சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகியுள்ள இந்தக் காணொலி, அந்தக் கட்டடம் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கட்டப்பட்டதா, அங்கு யார் வசிக்கின்றனர், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்ற பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 9, 2026, 12:55 pm
ஜசெகவை நிராகரித்ததால் ஜொகூர் மந்திரி புசார் இனவெறியரோ, இனவாதியோ அல்ல: ஜம்ரி
June 9, 2026, 12:50 pm
