நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

‘மென்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக இருப்பது உலகக் கால்பந்தில் மிகக் கடினமான வேலை’: பயிற்சியாளர் ஆஞ்சே போஸ்டெகோக்லு

லண்டன்:

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் ஆஞ்சே போஸ்டெகோக்லு, மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காற்பந்து உலகில் மிகவும் கடினமான பொறுப்புகளில் ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாரெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட போஸ்டெகோக்லு, ‘தி ஓவர்லாப்’ (The Overlap) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது  இந்தப் பிரபலமான இங்கிலாந்து அணியின் மேலாளர் பதவி குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.

ரூபன் அமோரிம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் மைக்கேல் கேரிக் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மென்செஸ்டர் யுனைடெட்டை இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) போட்டியில் நான்காவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

“என் பார்வையில், இது காற்பந்து உலகிலேயே  மிகக் கடினமான பணியாகும். ஏனெனில், இந்த அணி எப்போதும் ஊடகங்களின் கண்காணிப்பிலும், ரசிகர்களின் கவனத்திலும் இருக்கும்.

அனைத்து அழுத்தங்களையும் சமாளிக்க தனித்துவமான திறமை கொண்ட ஒருவரோ, அல்லது பல ஆண்டுகளுக்கான திட்டத்தை உறுதியாகப் பின்பற்றும் கட்டுப்பாடு கொண்ட ஒருவரோ இதற்குத் தேவை,” என அவர் கூறினார்.

முன்னதாக, 2024-25 சீசனில் மென்செஸ்டர் யுனைடெட் 15-வது இடத்தில் முடிந்த அவமானகரமான செயல்பாட்டைத் தொடர்ந்து, 14 மாதங்களுக்குப் பிறகு அமோரிம் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும், அப்போது போஸ்டெகோக்லு பயிற்சியாளராக இருந்த டோட்டன்ஹாம் அணியிடம், யுனைடெட் அணி யூரோப்பா லீக் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.

இதுகுறித்து மேலும் விளக்கமளித்த போஸ்டெகோக்லு, யுனைடெட் அணியின் பயிற்சியாளர் பதவி வெற்றி–தோல்வி மட்டுமல்ல, தனிப்பட்ட மனஉறுதியையும் தேவைப்படுத்துவதாகக் கூறினார்.

“அங்கே உடனடி தீர்வு கிடைப்பது கடினம். ஆண்டுக்கு 100 செய்தியாளர் சந்திப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். 10 போட்டிகளில் வென்றாலும், ஒரு போட்டியில் தோற்றால் அதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்படுவீர்கள்.

அணியின் வரலாறு எப்போதும் உங்கள் செயல்களை நிழல்போல் தொடரும். இதை ஏற்றுக்கொண்டு, ‘இந்த பொறுப்பை நான் என் முறையில் மேற்கொள்வேன்’ என்று கூறும் மனவலிமை அவசியம்,” என்றார்.

இதற்கிடையில், ஓல்டு டிராஃபோர்டில் மைக்கேல் கேரிக்கின் நீண்டகால எதிர்காலம் குறித்து மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

அவர்  தற்போது 2025-26 சீசன் முடிவுவரை இடைக்கால பயிற்சியாளராகச் செயல்படும் ஒப்பந்தத்தில் உள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset