நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மாவீரன் திப்பு சுல்தான் -  கவிதா சோலையப்பன்

20 நவம்பர் 2021 - இன்று மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்தநாள்.

திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசா அவர்களுக்கும்  மகனாகப் பிறந்தார். ஹைதர் அலியும் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றவர்.  

இந்த ஹைதர் அலி தான் வேலு நாச்சியாருக்கு படை கொடுத்து ஆங்கிலேயரை வெல்ல உதவியவர்.  ஹைதர் அலி சாதாரண குதிரை வீரனாக இருந்து, படிப்படியாக உயர்ந்து பிறகு ஒரு மைசூர் அரசை ஆளும் மன்னனாக உயர்ந்தவர்.  இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை  எதிர்த்து வெற்றி வாகை சூடியவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் தந்தை ஹைதர் அலியும் மகன் திப்பு சுல்தானும் அடங்குவர்.

1782 ஆம் ஆண்டு தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, தனது 32 வது வயதில் மன்னராக அரியணை ஏறினார் திப்பு.  1782 முதல்1799 வரை மைசூர் பகுதியை ஆட்சி செய்தார். ஆட்சித் தலைநகரமாக சீரங்கப்பட்டினம் இருந்தது. மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான், புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார்.

ஹைதர் அலியைப் போலவே  திப்புவும் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்தார்.

திப்பு என்ற உருது சொல்லுக்கு புலி என்று பொருள். அவர் தனது பெயருக்கு ஏற்ப ஒரு மாவீரனாக வாழ்ந்து காட்டினார். "ஆடுகளைப் போல அடிமைகளாக பல ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கி மக்களிடையே விடுதலை எழுச்சியை உருவாக்கினார். இன்று பலரும் பூகோள அரசியல் பற்றி பேசிவருகிறார்கள். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டி பிரான்சு மாவீரன் நெப்போலியனுடன் இணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொண்டார் திப்பு.

Napoleon, Tipu Sultan and contemporary preoccupations - Telegraph India

வாலோப்ஸ் தீவில் உள்ள நாசா வரவேற்பறையில் உள்ள ஓவியம் ஆங்கிலேயே இராணுவத்திற்கு எதிராக திப்பு சுல்தான் ராக்கெட்டுகளை சித்தரிக்கிறது

கிழக்கிந்திய கம்பெனியார் அஞ்சும் அளவிற்கு திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். வெடிமருந்து கொண்டு தயாரிக்கப்படும் ராக்கெட் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்கள் சீனர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

ஆனாலும், இரும்பு கொண்டு செய்யப்படும் சக்தி வாய்ந்த ராக்கெட்  தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பின்னாளில் இவரைப் பின்பற்றியே  ஆங்கிலேயர்  ராக்கெட் செய்தனர். இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல, நாசாவின் வாலோபஸ் விமானதள அலுவலக அறையில் ஆங்கிலேயே சிப்பாய்களை திப்புவின் ராக்கெட்கள் தாக்கும் ஓவியம் ஒன்றும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ஆறு மில்லியன் பவுண்டுகள் வசூலானதாம்.

திப்பு, இசுலாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், சகோதரத்துவத்தை இறுதிவரை கடைப்பிடித்தார்.

அவரது ஆட்சியில் ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் அவரவர் வழிபாட்டு தளங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. திப்பு சுல்தான் சமய வேறுபாடுகள் களைந்தவராய், தனது அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில்  கிருஷ்ணா ராவ் - பொருளாளர்,  சாமைய்யா ஐயங்கார் - தபால் மற்றும் காவல்துறை அமைச்சர், பூர்ணையா - வருவாய்த்துறை அமைச்சராக நியமித்திருந்தார்.

முழுமையான மதுவிலக்கைக் கொண்டு வர,  நாம் இன்றளவும் எத்தனையோ போராட்டங்களை நடத்தி தோல்வியையே கண்டுகொண்டிருக்கிறோம்.

Tipu Sultan - Wikipedia

ஆனால், திப்புவோ அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திருந்தார். திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், விபச்சார முறையும் ஒழித்திருந்தார். திருவாங்கூர் பகுதியில் குறிப்பிட்ட சமூகப் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில், இக்கொடுமையை எதிர்த்து கவர்னருக்கு கடிதம் எழுதினார்.

இன்று வரை விவசாயிகளுக்கு ஆதவரான மற்றும் எதிரான வேளாண் சட்டங்கள் காலந்தோறும்  கலந்தே காணப்பட்டாலும், திப்புவின் ஆட்சி காலத்தில் விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மைசூர் மாகாணம் தன்னிறைவு பெற்றிருந்தது.  சரியான நீர்ப்பாசன வசதி, உயர் தர விதைகள் பயன்பாடு, வேளாண்மை செய்யும் உழவர்களுக்கு நிலவுடைமை என வேளாண் புரட்சி செய்தவர் திப்பு. 

1766 முதல் 1799 வரை ஆங்கிலேயருக்கு எதிராக மொத்தம் நான்கு மைசூர் போர்கள் நடைபெற்றன. இதில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் மைசூர் போர்கள் திப்பு தலைமையில் நடைபெற்றன. இரண்டாம் போரில் திப்பு வெற்றி பெற்றார். 

அதன் பிறகு 1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மைசூருக்கு எதிரான கூட்டணியில் மராட்டியப் பேரரசும் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. 

சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினைத் தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும், திப்பு சுல்தானை தோற்கடித்த காரன் வாலீஸ் அதே சீரங்கப்பட்டின உடன்படிக்கைபடி , ரூபாய் மூன்று கோடி பணத்திற்காகத் திப்புவின் பத்து வயது  அப்துல் காலிக் சுல்தான் மற்றும் எட்டு வயது மொய்சுதீன் சுல்தான் ஆகிய இரு மகன்களையும் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டான். 

காரன் வாலீஸ் நினைவாக வடிக்கப்பட்ட சிலை ஒன்றில் சரணடைந்த திப்புவின் மகன்களை காரன் வாலீஸ் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டு சென்னையில் பொது இடத்தில் வைக்கப்பட்டது.  துரோகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட இச் சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், அப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.

Tiger headed sabre from the regalia of Tipu Sultan [X-Post From /r/SWORDS]  : r/Serendipity

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்பு கைது செய்த ஆங்கிலேயப் படைவீரர்களை விடுவிக்க மறுத்து வந்தார். மேலும், கிழக்கு இந்திய கம்பெனி விரிவாக்கத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்த திப்புவை போரில் வீழ்த்த முடியாது என்றெண்ணிய ஆங்கிலேயர்கள் திப்புவின் அமைச்சர்களை விலைப்பேசி, சூழ்ச்சி செய்தனர். 

இதனைத் தொடர்ந்து 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தீடிரென திப்புவின் சீரங்கப்பட்டின கோட்டை  தாக்கப்பட்டது. இதுவே இறுதியான நான்காம் மைசூர் போர். திப்புவின் நயவஞ்சக அமைச்சர்களால் கோட்டையின் தண்ணீர் கதவு ஆங்கிலேயர்களுக்கு திறந்து விடப்பட்டது. உணவருந்தி கொண்டிருந்த திப்பு, தப்பித்து செல்ல எத்தனையோ வழிகள் இருந்தும் எந்த பாதுகாப்பு ஆடைகளும் அணியாமல் வீரர்களோடு வீரராய் துணிச்சலுடன் போரிட்டார்.

முடிவில் சூழ்ச்சி வென்றது; 1799 ஆம் ஆண்டு மே 4  ஆம் நாள் குண்டு காயங்களால் வீரமரணம் அடைந்தார் திப்பு. போரின் முடிவில் திப்பு சுல்தானின் மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். இப்போரில் திப்பு சுல்தானுக்கு மறைமுகமாக உதவிய ஆற்காடு நவாப் உம்தத் உல் உம்ராவை, ஆங்கிலேயர்கள் பின்னர் நஞ்சு வைத்து கொன்றதாக கருதப்படுகிறது. திப்புவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் இன்றும் சீரங்கப்பட்டினத்தில் இருக்கிறது.

திப்பு இறந்த பிறகு அவரது கோட்டையில் இருந்து ஆங்கிலேயர்களால் எடுக்கப்பட்ட பொன், பொருள், ஆயுதங்கள், கலை பொருட்கள், ஆடை, அணிகலன்கள் அனைத்தும் இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இப்பொருள்களில் சில இலண்டன் அருங்காட்சியகங்களிலும், சில அவ்வப்பொழுது ஏலங்களிலும் விடப்பட்டுவருகின்றன.

திப்புவின் அறிவியல் தொழில்நுட்ப அறிவிற்கு சான்றாக இருந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது திப்பு தனது இசைக்கருவிகள் கொண்ட அறையில் வைத்திருந்த புலி பொம்மை. இது புலி ஒன்று ஆங்கிலேயர் ஒருவரை கடிப்பதும், அப்பொழுது புலி உறுமுவதும், அந்த மனிதன் அலறும் சத்தமும் கொண்ட பொம்மையாகும்.  தற்பொழுது இப்பொம்மை இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.

முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும், மதுபானங்கள் மற்றும் விமான தொழிலில் பிரபலமானவருமான விஜய் மல்லையா 2004 ஆம் ஆண்டு இலண்டனில்  நடைபெற்ற ஒரு ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 175,000 பவுண்டுகள்  கொடுத்து வாங்கினார் என்பது  தகவல். அண்மையில் ஏலம் விடப்பட்ட ஒன்றரை மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கத்தாலான புலி உருவம் கொண்ட திப்புவின் தலைக்கீரிடம்  நாட்டை விட்டு வெளியே எடுத்துச்செல்ல இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ள செய்தியும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துரைப்போம்.  

(திப்பு சுல்தான் குறித்த நூல் பெற தொடர்பு கொள்ள கட்டுரையாளரின்

வாட்ஸ் அப் : 00 971 50 51 96433)

தொடர்புடைய செய்திகள்

+ - reset