நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பேராக் அரசாங்கத்தில் மஇகாவுக்கு மீண்டும் ஆலோசகர் பதவிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஈப்போ:

நாட்டின் மூன்றாவது பிரதமர் பதவி ஏற்றிருக்கும் நிலையில் அம்னோ, பெரிக்கத்தான் நேஷனல், பாஸ், மசீச, மஇகா உட்பட மேலும் சில கட்சிகளின் பெயரில்லாத கூட்டமைப்பில் தற்போது ஆட்சியும் அரசும் ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது.

பேரா மாநிலத்தை பொறுத்தவரை அம்னோ, பெரிக்கத்தான் நேஷனல்,பாஸ் ஆகிய கட்சிகள் மாநில அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ளது.

மசீச, மஇகா இரண்டு கட்சிகளும் தேசிய முன்னணி கூட்டணியில் இருந்தாலும் 14ஆவது பொதுத் தேர்தலில்(2018) போட்டியிட்ட சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் இந்த இரண்டு கட்சிகளும் தோல்வியை தழுவின.

மஇகாவை பொறுத்தவரை 2008, 2013, 2018 ஆகிய மூன்று பொதுத்தேர்தல்களிலும் சட்டமன்றத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு பேரா சட்டமன்றத்தில் மஇகா பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில்  மஇகாவின் டான்ஸ்ரீ சு.வீரசிங்கம் பேரா மந்திரி பெசாரின் மாநில இந்திய விவகாரப்பிரிவு ஆலோசகராக சிறப்பு நியமனம் செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற செயலாளர், துணை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தவரும், பழுத்த அனுபவமிக்கவருமான வீரசிங்கம் பேரா மாநில மஇகா தலைவராகவும் இருந்து சிறப்பாக செயலாற்றினார்.
இவரது தலைமைத்துவத்தில் தான் பேரா மாநில இந்திய மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக அன்றைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டி ராஜா டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் தலைமையிலான மாநில அரசு 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் சுங்காயில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது "கல்வி தோட்டம்" என்ற செம்பனை விவசாயமாகியுள்ளது.

அவரை தொடர்ந்து 2013 பொதுத்தேர்தலிலும் மஇகா பேராவில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்றங்களும் தோல்வியை சந்தித்தது.

மீண்டும் மஇகாவுக்கு மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர்  நியமன பதவி டத்தோ வ.இளங்கோவுக்கு வழங்கப்பட்டது. இவரும் 5 ஆண்டுகள் இப் பொறுப்பில் இருந்தார். 2018 நடைப்பெற்ற 14 ஆவது பொதுத்தேர்தலிலும் பேராவில் மஇகா தோல்வியுற்றது. ஆனால் கடந்த 2 இரண்டு தவணைகள் கிடைத்த நியமன பதவி இம்முறை வழங்கப்படவில்லை. காரணம், பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியை பிடித்ததால் மஇகா இந்த வாய்ப்பினை இழந்தது.

சுமார் 22 மாத ஆட்சிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு  பெர்சத்து கட்சியை சேர்ந்த டத்தோஸ்ரீ பைஃசால் அசுமு மந்திரி பெசாராக இருந்து மஇகாவுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியும் கவிழ்ந்து, அண்மையில் தேசிய முன்னணியின் மாநில தலைவர் டத்தோ சராணி மாநில மந்திரி பெசாராக தற்போது இருக்கிறார். கடந்த காலங்களில் மஇகாவுக்கு வழங்கப்பட்ட மந்திரி பெசாரின் ஆலோசகர் நியமன பதவி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பு இன்று வரை ஏமாற்றமாகவே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு மஇகாவுக்கு மந்திரி பெசாரின் செயலாளர் பதவி (இந்தியர் விவகாரம்) தரப்பட்டது. இந்த பதவியை பொறுத்தவரை எவ்வித அதிகாரமும் இல்லாத பொறுப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்தியர்களின்  பிரச்சனைகளை மந்திரி பெசாரின் காது வரை கொண்டு செல்வது மட்டுமே இந்த செயலாளர் பதவியின் பணி. 

2008, 2013 ஆகிய இரண்டு தவணைகள் வழங்கப்பட்ட மந்திரி பெசாரின் ஆலோசகர் நியமனம் என்பது மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருக்கு  நிகரான பதவியாகும்.
மூன்று அதிகாரிகள், மாநில அரசின் வாகனம், ஓட்டுநர், இந்திய சமுதாயத்திற்கான மானிய நிதி, தமிழ்ப்பள்ளிகளுக்கான ஆண்டுதோறும் வழங்கப்படும் 10 லட்சம் வெள்ளி கல்வி மானியம் போன்ற இன்னும் சில இந்தப் பொறுப்புக்கு  நேரடியாக வழங்கபட்டது

ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள செயலாளர் பதவி எவ்வித அதிகாரமுமில்லாத பதவி. தேசிய முன்னணி பேராவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் மஇகா ஆலோசகர் பதவி மீண்டும்  கிடைக்குமா, அல்லது மீதமுள்ள சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு செயலாளர் பொறுப்போடு காலத்தை போக்கி விடுமா மாநில தேசிய முன்னணி அரசாங்கம் என்ற கேள்வி விடையை தேடிக் கொண்டிருக்கிறது.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset