நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உறவுச் சிறகுகள் : டாக்டர் ஃபஜிலா ஆசாத்

உறவுச் சிறகுகள்

தம்பதிகள் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை உறவுச் சிக்கல்கள்தான். கணவன் மனைவி உறவுகளுக்குள் சில நேரம் எழும் சின்ன சண்டை எளிதில் தீர்க்க முடியாத ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும். உறவுச் சிக்கல்கள் வராமல் இருப்பதற்கு நீங்கள் சொல்லக்கூடிய ஆலோசனை என்ன?

ஒவ்வொரு உறவுக்குள்ளும் இருக்கும் எதிர்பார்ப்புகளால்தான் பெரும்பாலும் உறவுகளுக்குள் சிக்கல் வருகிறது. இந்த எதிர்பார்ப்புகள் இரண்டு விதமாக இருக்கும்.

முதலாவது, இவர்கள் எனக்கானவர்கள், எனக்காக இப்படி நடந்து கொண்டால் என்ன என்று மற்றவரின் செயல்களை தனக்கேற்றாற்போல் மாற்ற நினைப்பது. அடுத்தது, நான் இவர்களுக்காக இவ்வளவு செய்கிறேன், ஆனால் இவர்கள் இதை அங்கீகரிக்காமலேயே - ரெகக்னைஸ் பண்ணாமலேயே - இருக்கிறார்களே என்று நினைப்பது. இவை இரண்டும்தான் பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது.

ஒருவர், தான் எந்த எதிபார்ப்பும் இல்லாமல் பிறருக்குச் செய்வதாக நம்பும் அதே நேரம் மற்றவர்கள் அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டும் எனவும் தான் செய்யும் விஷயத்தை சரியான முறையில் அங்கீகரிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கும் போது அங்கு ஒரு சிக்கலுக்கான முதல் முடிச்சு விழுந்து விடுகிறது. நாட்கள் செல்லச் செல்ல அந்த கவனிப்பு அல்லது தான் எதிர்பார்க்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அந்த முடிச்சு இறுகி உறவுகளுக்குள் சிக்கல் முற்றுகிறது.

இதற்கான தீர்வுகளுக்குள் செல்லும் முன், அணுகுமுறையும், தான் நினைப்பதை வெளிப்படுத்தும் விதமும் ஒருவருக்கொருவர் மாறுபடும் என்னும் அடிப்படையை நீங்கள் புரிந்து கொண்டால், சிக்கல் ஏற்படுத்துவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் பெரும்பாலானவை பிரச்னையே அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் உணர்வுகளும் அணுகுமுறையும் வேறு வேறாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது எங்கோ வளர்ந்த ஒரு ஆணும், எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணும் இணைந்திருக்கும் மண வாழ்வில் இருவரது உணர்வுகளும் அணுகுமுறையும் ஒன்றாக இருக்குமென்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்?

இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் ஒரு உணர்வைப் பற்றிய ஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் முறையும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரே மாதிரியான அன்பு வைத்திருப்பார்கள். ஆனால் அதை ஒரு ஆண் வெளிப்படுத்தும் விதமும் அதையே ஒரு பெண் வெளிப்படுத்தும் விதமும் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். பெண் தன் அன்பை பிடித்த சமையல் செய்து தருவதன் மூலம் வெளிப்படுத்தலாம். ஆண் ஒரு பார்வை, ஒரு ஸ்பரிஷம் மூலம் வெளிப்படுத்தலாம்.

கணவன் தன்னை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டுமென பெண் விரும்பலாம். மனைவி பரிசுப்பொருள் தந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டுமென்று ஆண் விரும்பலாம். அப்படி இருந்தால், அதை ஒருவருக்கொருவர் பக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். அதைவிடுத்து மற்றவர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், அப்படி இருந்தால்தான் அவர் தன் மீது முழுமையான அன்பு வைத்திருப்பதாக அர்த்தம் என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொள்வதாலேயோ அல்லது அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதாலேயோ அங்கே ஒரு பிணைப்பு ஏற்படுவதை  விட்டும் பிணக்கமே ஏற்படும்..

பொதுவாக ஆண்கள் எது ஒன்றையும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை விட செயல்களால்தான் உணர வைப்பார்கள். அதுபோன்றே, அவர்களுக்கும் செயல்களால் அங்கீகாரங்கள் உணர்த்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதேசமயம், பெண்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களும் வார்த்தைகளால் சொல்ல கேட்பதில் திருப்தி கொள்வார்கள். பெரும்பாலும் பெண் இப்படித்தான் இருப்பார் என்று கணவனும் ஆண் இப்படித்தான் இருப்பார் என்று மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்காக நீ இதெல்லாம் செய்கிறாய், என்னை நீ நன்றாக கவனித்துக் கொள்கிறாய், அதை நான் முழுதும் புரிந்து கொள்கிறேன் என்று ஒரு கணவன் வார்த்தைகளில் சொல்லவில்லை என்பதால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை என்று மனைவி நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளில் உள்ளதைவிட ஆழமாக அவர்கள் அந்த உணர்வை தங்கள் செய்கையால் உணர்த்தி இருப்பார்கள். இதையே ஒரு மனைவி நூறு முறையாவது அன்பொழுக சொல்லி இருப்பார்.

இங்கு ஒரு நிகழ்வை கற்பனை செய்து பாருங்கள். ஒரு நாள் கணவன் மனைவிக்கிடையில் ஒரு காரசாரமான உரையாடல் நடந்ததாக வைத்துக் கொள்வோம். தவறு கணவன் மேல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ’இந்தத் தவறுக்கு அவர் வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லையே’ என்று மனைவி நினைக்கலாம். ஆனால் அன்று ஏதோ ஒரு தருணத்தில் தனது மனைவியின் கையை அழுத்திப் பிடித்தததன் மூலம் அந்த வருத்தத்தை கணவர் வெளிப்படுத்தி இருப்பார். ஆண்களின் Expressionism பற்றி அறிந்திருக்கும் பட்சத்தில் இதை அந்த மனைவியால் புரிந்துகொள்ள முடியும். இல்லையென்றால், பெண்களைப் பொருத்தவரை இங்கு ஆணின் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தப் பட்ட அந்த அன்பு உணரப் படாத ஒன்றாகவே மறைந்து விடும்.

இதுவே தவறு மனைவியின்மேல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மனைவி அது எதனால் நிகழ்ந்தது, எந்த இடத்தில் தான் தவறாக புரிந்து கொண்டார் என்று முதலில் இருந்து ஆரம்பித்து விளக்கம் சொல்ல ஆரம்பித்திருப்பார். நேரம் செல்லச் செல்ல கணவனுக்கு ‘என்ன இது மீண்டும் ஆரம்பித்து விட்டாரே, செய்த தவறைக்கூட ஏற்றுக் கொள்ள தயாராக இல்லையே’ என்று எண்ணங்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்து விடும். பெண்களின் Expressionism பற்றி அறிந்திருக்கும் பட்சத்தில் இதை அந்த கணவனால் புரிந்துகொள்ள முடியும். இல்லையென்றால் ஆண்களைப் பொருத்தவரை பெண்ணின் அன்பில் தோய்ந்த வார்த்தைகள் லொட லொட என்று பேசும் பேச்சாக கரைந்து விடும்.

உண்மையில் அன்பு அவரவர் வகையில் பரிமாறப் பட்டிருந்தாலும் .தாங்கள் நினைத்ததுபோல் செயல்கள் இல்லை என்பதனாலேயே தாங்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொள்வதனால்தான் உறவுகளுக்குள் சிக்கல்கள் எழுகிறது.

எனவே பிறரின் இயல்புகளை, இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை, புரிந்து உங்கள் மனதில் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி பிறரை நீங்கள் ஏற்றுக்கொள்ள நினைக்கும்போதே உங்களையும் பிறருக்கு புரிந்து கொள்ள வைக்க முடியும். புரிந்துகொள்ளும் எந்த உறவிலும் பிரச்சினை வராது.

அதனால் முதலில் எனக்காக அவர்கள் மாற மாட்டார்களா? அவர்களுக்காக நான் மாறித்தானே இருக்கிறேன் என்று நினைக்காமல் அவர்களை நான் புரிந்து கொள்கிறேன் என்னை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு வந்தாலே உறவுகளுக்குள் விழுந்துள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கி விடும். அந்த உறவு வரமாக மாறிவிடும்.  

எந்த உறவும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருக்கிறார்களா என்பதில் இல்லை அவர்கள் ஒருவருக்கொருவர் பொருந்திப் போகிறார்களா என்பதிலேயே அது இணக்கமான உறவாக நிலைத்து நிற்கிறது.

உதாரணமாக, கணவன் மனைவி உறவிலோ அல்லது பெற்றோர் குழந்தை உறவிலோ யாராவது ஒருவர் தாங்கள் தவறு செய்துவிட்டாதாக மருகி நின்றால், முதலில் நீங்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதல் ஏற்படுத்துகிற உணர்வைத் தர வேண்டும். ’ஏன் இப்படிச் செய்தாய்? நான் அப்பவே சொன்னேன்ல’ என்கிற அளவுக்கு அவர்களை மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்காமல் சொல்ல வரும் விஷயத்தைக் கேட்டுக் கொள்வது நல்லது.

பின்னர், சிறிது நேரம் கழித்து சகஜ நிலைக்கு திரும்பிய பின் அறிவுரைகளைக் கூறலாம். எடுத்த எடுப்பிலேயே அறிவுரை கூற ஆரம்பித்தால் கேட்பவர்களுக்கு இனிமேல் எதையும் சொல்லக் கூடாது என்ற எண்ணமே வரும். அதனால் அதை மனதில் வைத்துக் கொண்டு தவறுகளை முதலில் ஏற்றுக் கொள்ளவும், பின்னர் அதை திருத்திக் கொள்வதற்கான அறிவுரையையும் வழங்குவது உறவுகளையும், உணர்வுகளையும் சீராக வைத்திருக்கும்.

உறவுகளில் சிலர் தான் சொல்வதைக் கேட்டால்தான் தன் மீது அன்பு இருப்பதாக அர்த்தம் என்று நினைப்பார்கள். அதுவே நல்ல உறவில் கூட விரிசலை ஏற்படுத்தி விடும். உண்மையில் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்காமல் விட்டால் அது அன்பில்லாத காரணத்தால் என்பது இல்லை; அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவர்களுடைய அந்த நேர மனநலம், உடல் நலம், சூழ்நிலை சார்ந்து அவர்கள் நினைத்தது போல் அவர்களால் செயல் பட முடியாமல் நீங்கள் சொன்னதை ஏற்க முடியாமல் இருக்கலாம். தவிர உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. அவைகளைப் புரிந்து கொள்ளும் போது உறவுகளில் மகிழ்ச்சி சிறகுகள் விரியும்.

கட்டுரையாளர்: டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

இணைய அஞ்சல்: Fajila Azad fajila@hotmail.com

தொடர்புடைய செய்திகள்

+ - reset