நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

பத்திரமாக திரும்பியது யூனிட்டி-22 விண்கலம்: இந்திய வம்சாவளியைச் சார்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சுக்கு பிறகு சிரிஷா சாதித்தார்

ஹூஸ்டன்: 

விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி 22 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று பத்திரமாக திரும்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற 3ஆவது இந்திய வம்சாவளி பெண் என்ற சாதனையை சிரிஷா பந்த்லா படைத்துள்ளார். 

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் அமெரிக்காவின் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின் மற்றும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. 

இந் நிறுவனங்கள் வெவ்வேறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்து வருகின்றன. அந்த வகையில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது யூனிட்டி 22 விண்கலத்தை ஜூலை 11ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்ய தேதி நிர்ணயித்தது.

அதோடு, இப் பயணத்தில் விர்ஜின் கேலக்டிக் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ரிச்சர்ட் பிரான்சன்  (70) பயணிப்பதாக அறிவித்தார். இவருடன் விர்ஜின் கேலக்டிக் விஞ்ஞானிகளான இந்திய வம்சாவளி சிரிஷா பந்த்லா (34) உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

சிரிஷா ஆந்திரா மாநிலம் குண்டூரில் பிறந்தவர். நியூ மெக்சிகோவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து திட்டமிட்டபடி இரட்டை விமானத்துடன் கூடிய யூனிட்டி விண்கலம் நேற்றிரவு புறப்பட்டது. இதில், 2 விமானிகள், பிரான்சன், சிரிஷா உட்பட 8 பேர் பயணம் செய்தனர். 

புறப்பட்ட சிறிது நேரத்தில் 46,000 அடி உயரத்தை எட்டியது. அங்கிருந்து, விமானத்துடன் பொருத்தியிருந்த யூனிட்டி விண்கலம் பிரிந்தது. அதிலிருந்த ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி, சுமார் 1800 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்தது. 

விண்கலம் புறப்பட்ட மூன்றே நிமிடத்தில் சுமார் 2.7 லட்சம் அடி உயரத்தை தொட்டு, புவி ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குள் நுழைந்தது. விண்கலத்தில் இருந்த பிரான்சன், சிரிஷா உள்ளிட்டோர் ஈர்ப்பு விசை இன்றி விண்கலத்தில் மிதக்கத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து விண்கலம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து வேகத்தையும் குறைத்தது. சுமார் 14 நிமிடத்தில் விண்கலம் 2.7 லட்சம் அடி உயரத்திலிருந்து மீண்டும் ஏவு தளத்திற்கு வெற்றிகரமாக தரை இறங்கியது. 

இதைத் தொடர்ந்து, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்று திரும்பிய 3ஆவது இந்திய வம்சாவளி பெண் என்ற சாதனையை சிரிஷா படைத்துள்ளார். 

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதைத் தொடர்ந்து, விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தனது விண்கலத்தை வரும் 20ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பி சோதிக்க உள்ளது. இப்பயணத்தில் பெசோஸ் பயணிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset